சமூகத்தில் தற்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் சாதிய கொடுமைகள். அடுத்தடுத்து நடக்கும் சாதிய கொலைகள், காதல் திருமணத்தில் தொடங்கி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரையுமே சாதிய வன்கொடுமைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.இதற்கான முற்றுப்புள்ளியை யார் தான் வைப்பது என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்துள்ளது. எனது பள்ளி பருவத்திலும் இப்படியான பிரச்சனைகள் அதிகம் இருந்தது.ஆனால் குரல் கொடுக்க என்னால் முடியாமல் பள்ளி நிறுவன்ங்களுக்கு பயந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

சிறு வயதில் இருந்து என்னை என் உறவினர்களும் என் அக்கம் பக்கத்து வீட்டாரும் சாதியை வைத்து பழகுமாரு அறிவுரை வழங்குவார்கள்.அவர்களோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் தடுத்து வந்த சமூகம்.என் உறவினர்களும் சரி அக்கம் பக்கத்தினரும் சரி அவர்களோடு பேசுவதைக் கண்டாலே என்னை திட்டுவார்கள்.சிறு வயதில் எனக்கு அவர்கள் கூறிய சாதி மேல் இருந்த கோபம் அவர்களை மட்டும் ஏன் பிரித்து வைக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை மீறி நான் எல்லாரிடமும் சரிசமமாய் பழக ஆரம்பித்தேன்.

பள்ளியிலும் அப்படிப்பட்ட நிலை தான் இருந்தது. எனது அறிவியல் ஆசிரியை (ஜெஸிந்தா) அவர்கள் என் வகுப்பில் பயிலும் சகதோழி சற்று படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்தால். அவளை அறிவியல் ஆசிரியை நீ தலித் என்றும் அதனால் தான் படிப்பில் சரியான கவனம் இல்லை என்றும் கூறி அவளை மிக்க்கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.எனக்கு கோபம் வரும் ஆனால் என்னால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லை. எல்லாவற்றிலும் என் தோழி ஒதுக்கப்பட்டாள். எங்களோடு அமர்ந்து சாப்பிட்டால் கூட என் அறிவியல் ஆசிரியைத் திட்டுவார். எங்களோடு எந்த வித போட்டிகளில் கூட கலந்து கொள்ளவிடமாட்டார்.100 க்கு மேற்பட்ட மாணவிகள் என் வகுப்பில் இருப்பர் அவர்களில் இவளை மட்டும் சொல்வதால் பாதி நாட்கள் வகுப்பிற்கு வரமாட்டால்.எதிலும் பங்கேற்கமாட்டால். எங்களால் மறைந்து தான் பழகமுடிந்தது. இதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத கோழையாக திகழ்ந்திருந்தேன்.

பள்ளி பருவத்தைக் கடந்து சென்று கல்லூரிக்குள் நுழைந்தேன். கல்லூரி எனக்கு கற்றுக்கொடுத்தது சாதி, மதம் இல்லா சக மனிதனாய் மனித குலத்தோடு இணைந்து வாழும் ஓர் புதிய வாழ்க்கை. சாதியும் குறுக்கிடவில்லை, மதமும் குறுக்கிடவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் இந்திய மாணவர் சங்கம். இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்ததும் எனக்கான பாதை எதுவாக இருக்க வேண்டுமென்று என்னை சிந்திக்க வைத்தது. சமூக பிரச்சனைகளில் குரல் கொடுக்கும் அமைப்பில் நானும் என் குரலைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அப்பொழுது நடைமுறைகளில் இருந்த பல பிரச்சனைகளைத் தெரிந்துக்கொண்டேன். அதில் ஒன்று தான் இப்பொழுது அதிகமாக நடந்துக்கொண்டிருக்கும் தலித்களுக்கான சமூகப் பிரச்சனைகள். நம் நாட்டில் அதனால் பல பேர் கொல்லப்பட்டனர்.எதுவும் புரியா நிலையில் இருந்தேன். மாற்றத்தைக் கொண்டு வர வேண்டி மாணவர் சங்கத்தோடு இணைந்தேன். என் தோழர்களான தலித்துக்களின் பிரச்சனைகளை திரும்பிப் பார்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தேன்.எல்லையற்ற சாதி வெறிக் கொலைகள். உயர் சாதிப் பெண்களை  திருமணம் செய்ததால் சாதிவெறியில் பலபேரை வெட்டிகொன்ற சம்பவம் எனக்குள்ளே மிகுந்த ஆழமான தேடல்களை எழுப்பியது. ஏன் சாதி வெறியும், மத வெறியும் நாட்டில் தலைவிரித்து ஆடுகின்றது. அடுத்தடுத்து நடந்த சாதி வெறிக்கொலைகள் உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்ததால் நடந்த கெளசல்யா-சங்கர், இளவரசன்-திவ்யா, கோகுல்ராஜ்-சுவாதி போன்ற சாதிய வன்கொடுமைகள். அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடந்துக் கொண்டிருந்த கொடுமைகள். ரோகித் விமுலா வில் தொடங்கி தற்போது முத்துக்கிருஷ்ணன் இப்படி நிறைய சாதியக் கொலைகள். காதல் திருமணங்களில் தலித் என்ற காரணத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களும், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களை தொந்தரவு செய்து தலித் என்ற காரணமே உன் சாவை தீர்மானிக்கும் படி கொல்லப்பட்ட மாணவர்களும் தலித்தாய் பிறந்தது என் தவறல்ல என்பதை சுட்டும் வகையில் இறந்துள்ளனர்.

சாதி எங்கிருந்து வந்தது அதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி இன்னும் என்னில் எழுந்துள்ளது. எல்லோரும் ஒரே மனிதகுலமாய் தானே பிறந்துள்ளோம். ஆண், பெண் என்ற உடலமைப்பால் மட்டும் தானே வேறுபட்டுள்ளோம். மற்ற அனைத்திலும் நம்மால் என்ன முடியுமோ அதை செய்யும் அனைத்து திறனும் இருவரிடமும் இருக்கிறது. ஆனால் சாதியின் பங்கு தான் அதிகமாக உள்ளது. ஒருபுறம் இப்படி வதைக்கப்படுகிறார்கள் மறுபுறம் துப்புரவுத் தொழிலாளர்கள் என்ற பெயரில் வதைக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலை தலித் என்ற ஒரே காரணத்தால் மலத்தை அல்லும் அவநிலைக்கு தள்ளப்பட்டுகொண்டு இருக்கிறார்கள். விவரம் தெரிந்த நாட்களில் இருந்து கேள்விப்படுகிறேன் துப்புரவுத் தொழிலாளர்கள் யார் என்றால் தலித் என்று தான் கூறுகிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் அதை செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டால் அதனால் தான் அவர்கள் தலித் இனம் என்று என் காதுபட பேசினர் பலர். மலம் அல்ல அவர்கள் மட்டும் ஏன் வர வேண்டும். ஒரு நாள் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் பொதுக் கழிப்பிடங்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்கும் சமூகம், ஏன் அவர்கள் மட்டும் அதை செய்ய வேண்டும் என்கிற கேள்வியை கேட்பதில்லை.

தோழர் திவ்ய பாரதி அவர்களின் கக்கூஸ் ஆவணப்படம் ஒரு சிறந்த தொகுப்பு.துப்புரவுத் தொழிலாளர்களின் உண்மை நிலையையும் அவர்களின் துயரங்களையும் மிக அருமையாக படைத்துள்ளார். இன்னும் அவர்கள் அரசாங்கத்தால் கொலைசெய்யப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் அருமையான பாடல் வரிகள். பாதாளக் குழியில் இறங்கி சுத்தம் செய்து தான் அவர்களது குடும்பங்களைக் காக்க வேண்டியிருக்கிறது. மறைக்கப்பட்ட படுகொலைகளும், வெளிவராத சாதியக் கொலைகளும், அரசாங்கத்தால் தூண்டப்பட்டு பாதாளக் குழிகளில் இறக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் மரணங்களும் ஊடகங்களுக்கு கூட தெரியாமல் மறைக்கப்பட்டவை இன்னும் பல. கடந்த வாரத்தில் கடலூரில் விஷவாயு தாக்கி  3 பேர் இறந்துள்ளனர். அது மிகவும் தவறு அரசாங்கத்தால் அந்த மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பாதாள குழியில் இறங்கி சுத்தம் செய்தால் விஷவாயு தாக்கும் என்று அரசாங்கத்திற்கு தெரியும் ஆனாலும் அவர்களை அந்த வேலை செய்ய சொல்லி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல அதை தொடர்ந்து திருச்சியில் பாலக்கரை என்ற பகுதியில் வயது முதியவரைக் கட்டாயம் பாதாளக் குழியில் இறங்க வைத்துள்ளது அரசாங்கம். கழுத்து வரை கழிவு இருக்கிறது. அவர் இறங்கும் காட்சியை என்னால் படமாக கூடப் பார்க்க முடியவில்லை. திவ்யபாரதியின் ஆவணப்படத்தில் உள்ள பாடலில் அழகாக கூறியிருப்பார். “ ஆள மட்டும் நீங்களா கொஞ்சம் சொல்லுங்கடா, செத்து மாள மட்டும் நாங்களா வந்து அல்லுங்கடா ” இதை விட யாரும் அருமையாக அரசாங்கத்திற்கு எடுத்து சொல்ல முடியாது.

நாம் அனைவரும் முன்னெடுத்து செல்ல வேண்டும் அவர்களின் பிரச்சனைகளை. எப்படி கொண்டு செல்வது நம் அரசியல் நிலைமையை நினைத்தாலே அதில் இந்த பிரச்சனைகள் பாதி மறைந்து விடும். சமூகப் பிரச்சனைகள் அதிகரித்து விட்டதால் தலித்திற்கான பிரச்சனைகள் மறைந்து கிடக்கிறது.

முத்துக்கிருஷ்ணன் மரணம் கூட ஒரு எடுத்துக்காட்டு. தொடர்ந்து ஒரு வாரம் மட்டுமே அவரின் மரணம் பெரிய அளவில் தெரிந்தது ஆனால் இப்பொழுது இடைத்தேர்தல் பற்றிய பிரச்சனைகளில் காணாமல் போனது.ஊடகங்களும் சரி அதன் பின் அவரைப் பற்றிய எந்த வித தகவலையும் தரவில்லை அதை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.எங்கு போனது ஓர் உயிர் என்று யாருக்கும் தெரியாது.

வளர்ந்து வரும் இளைய சமூகமே மாற்றம் கொண்டு வா ஆண், பெண் என்ற ஒன்று மட்டும் தான் நம்மைத் தனித்துக் கொட்ட வேண்டும். சாதியோ, மதமோ நம்மிடையே வரக்கூடாது என்று உறுதிக்கொள்வோம்.மாற்றுப் பாதையையும் மாற்றுக் கருத்தையும் கொண்டு செல்லுங்கள்,தலித் என்ற வார்த்தையை உடைத்தெரியுங்கள். கல்லூரிகளும் மாணவர்களை மாணவர்களாக மட்டும் பாருங்கள். இப்படி சாதி மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நமது அரசாங்கம் தான்.தனி மனிதரை நான் குறைக்கூற விரும்பவில்லை. இப்பொழுது இருக்கும் ஆட்சி முறை தான் காரணம் ஒரு மாணவனும் சரி,துப்புரவு பணியில் உள்ளவர்களும் சரி இறக்கும் போதே முறையான விசாரனைகளும், தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தலித் என்ற காரணத்தால் ஒரு மாணவனின் சாவு நடக்கக் கூடாது.அதேபோல் மலம் அல்லவும் கூடாது அவர்களின் சாவும் இனி நம் நாட்டில் நடக்கக் கூடாது.அதற்கான மாற்று வழி இருந்தும் அதை நடைமுறைப் படுத்தாத நம் அரசாங்கம்.இவையனைத்தும் மாற்றம் பெற வேண்டுமெனில் அரசாங்கம் மாற்றம் பெற வேண்டும்.இளையோர்கள் எடுப்போம் மாற்றம் நோக்கியப் புரட்சிப் பாதையை.
தோள் கொடுப்போம் நம் தோழனுக்கு, உடைத்தெரிவோம் சாதிய வார்த்தைகளை, தூக்கி விடுவோம் பாதாளத்திலிருந்து,களை எடுப்போம் மாற்றத்திற்கான அரசியலை, கைக்கோர்த்துக் கொண்டு செல்வோம் அவர்களையும் நம் பாதையில்.
மாற்றம் வேண்டி…

Advertisements